×

500 ஆண்டுகளை கடந்து ஓடிய தேர் இந்த ஆண்டு ஓடாது நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் ரத்து: அறநிலையத்துறை மவுனத்தால் பக்தர்கள் அதிர்ச்சி

நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்ட திருவிழா நடைபெறாது என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 9ம் நாள் விழாவில் 500 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் 3வது பெரிய தேரான சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேரோட்டம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேர் இழுப்பர். இந்தாண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சிறப்புமிக்க ஆனித் தேரோட்ட திருவிழா நடத்துவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதுதான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் உள் திருவிழாவாக நடத்தப்பட்டது. அதுபோல் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில், புட்டாரத்தி அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் உள் திருவிழவாக நடத்தப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. நெல்லையப்பர் கோயிலில் இந்தாண்டு ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம் உள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்றால் இன்று (ஜூன் 25) கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஜூலை 3ம் தேதி ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆனித்தேரோட்ட திருவிழாவை உள் திருவிழாவாக நடத்தி சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஷ்வரர் மரத்தேரில் வெளி பிரகாரம் வலம் வரும் வகையில் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என எதிர்பார்த்த பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமையுடைய சுவாமி நெல்லையப்பர் தேரானது இந்த ஆண்டு ரதவீதிகளில் வலம் வராதது பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

நேரடி ஒளிபரப்பு செய்யலாமே
இந்த ஆண்டு ஆனித்தேர் திருவிழாவை இன்று (25ம் தேதி) முதல் ஜூலை 4ம் தேதி வரை உள் திருவிழாவாக நடத்தி அதை தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்த படியே சுவாமியை தரிசனம் செய்து கொள்ள முடியும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காணொலி காட்சி மூலம் பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதேபோல ஆனித் தேர் திருவிழாவையும் உள்ளேயே பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருவிழா மற்றும் உற்சவங்கள் நடத்த உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை நெல்லை தொகுதி எம்எல்ஏ ஏஎல்எஸ் லெட்சுமணன் வலியுறுத்தி கடிதம் அனுப்பினார். ஆனாலும் இந்து சமய அறநிலையத்துறை திருவிழாவையே ரத்து செய்துள்ளது.

சிறப்பு அபிஷேகம் தீபாராதனை
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு இன்று (25ம் தேதி) முதல் ஜூலை 4ம் தேதி வரை 10 நாட்களுக்கு சுவாமி, அம்மன், உற்சவ மூர்த்திகளுக்கு கும்ப ஜெபம், சகலவிதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மாலையில் சிறப்பு அலங்காரம், ஷோடச தீபாராதனை ஆகியவை மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் நேற்று மாலை முடிவு செய்தது. இதை பக்தர்களுக்கு ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Nellaiappar Temple Jun Terottam ,Nellayappar Temple ,Anni Chariotam ,The Endowment Devotees Shocked Silence , Nellaiappar temple, Ani chariot cancellation, charity department, shock of devotees
× RELATED நெல்லையப்பர் கோயில் புதிய நிர்வாக அலுவலர் பொறுப்பேற்பு